திருக்குறளுக்கு ஓவிய விளக்கம்!

  • April 20, 2013

திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் விளக்கும் வகையில், ஒவியங்களாக வரைந்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். சிறுவயது முதலே கல்வியின் மீதும், தமிழ் மொழியின் மீதும் தனக்கு இருந்த ஆர்வமே இந்த முயற்சியை செய்யத் தூண்டியதாகக் கூறுகிறார் கணினி அறிவியலில் இளநிலை படிக்கும் அந்த மாணவி.

விருதுநகர் மாவட்டம் மாணிக்கம் நகரில் வசித்து வரும் சேர்மநாதனின் மகள் ஹேமசௌந்தரி. சிறுவயது முதலே, ஓவியம் வரைவதில் திறன் பெற்றவராய் திகழ்ந்த இவர், தமிழ்ப் பற்றின் காரணமாக, திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்.இவரது எண்ணங்கள் மூலம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும், வண்ண வண்ண ஒவியங்களாக உயிர் பெற்றுள்ளன. கற்றோருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப தன்னுடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிவதாக கூறுகிறார் இவர்.

21 மீட்டர் நீளமும் ஒரு அடி அகலமும் உள்ள காகிதத்தில், சுமார் 3 வார காலம் இடைவிடாது வரைந்து தன் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் ஹேமசௌந்தரி. தன் முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 1330 திருக்குறளுக்கும் ஒவியங்களால் விளக்கம் அளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறார் இவர். தங்கள் மகளின் முயற்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாக கூறும் ஹேமசௌந்தரியின் பெற்றோர், அவரது அடுத்த முயற்சியும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

படித்துக் கொண்டிருக்கும் போதே, காலையிலும், மாலையிலும் ஓய்வு நேரத்தில் இத்தகைய சாதனை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்கின்றனர் ஹேமசௌந்தரியின் ஆசிரியர்கள். செய்யுள் வடிவிலான திருக்குறளுக்கு, ஓவியம் மூலம் விளக்கம் கொடுத்திருப்பது வித்தியாசமான முயற்சி என்றும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

கல்வி பயிலும் வயதில் ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிய வேண்டும் என்று ஒவ்வொரு மாணவரும் கருதுவது உண்டு. பெற்றோர், ஆசிரியர், மற்றும் நண்பர்கள் அளிக்கும் ஊக்கமே, இத்தகைய சாதனை இலக்குகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திண்மையை மாணவர்களுக்கு அளிக்கும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

Read More »

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.